Friday 24 June 2011

உதவி கேட்பவர்கள்/பிச்சைக்காரர்கள்

நான் புதிதாக வாங்கிய வீட்டில் இருந்து அலுவலகம் வருவதற்க்கு தினமும் போரூர் ஜங்ஷன் தாண்டித்தான் வரவேண்டும். ஜங்ஷன் ஒருமுறை தாண்டியவர்களுக்கு தெரியும் அது ஒரு பெரிய தலைவலி என்று. ஒவ்வொரு சிக்னலும் இருபது நிமிடம் பிடிக்கும், சத்தியமாக என்னக்குக் காத்திருப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் அந்த நிமிடங்களில் நான் பார்க்கும் அபிநயங்களும், பாவனையும், கூத்துப்பட்டறையில் கத்துக்கொண்டவனுக்கு கூட வராது.

என் காரின் வலது பக்கம் ஒரு அம்மா தன் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு "அம்மா, கொழந்தைய பாரும்மா சாப்பிட்டு நாலு நாள் ஆகுது. யாருமே மனசு வந்து பிச்ச போடமட்டேன்குறாங்கம்மா, நீ மகராசி மாதிரி இருக்கம்மா, பார்த்தாலே தினமும் சாமிக்கும்பிடுவேன்னு தெரியுதுமா உனக்கு தெரியும்மா கடவுளே தர்மம் பண்ணுனு தானேம்மா சொல்றாரு. இந்தபுள்ளைக்கு சோறு போட்டேன்னா உன் புள்ளைய சாமி பத்திரமா பாத்துக்கும்மா." எனக்கு இத கேட்டவுடனே தூக்கி வாரிப் போட்டுச்சு.

என்ன மாதிரியான வார்த்தைகள் அவை. என் பக்தியைப் பற்றி பேசி, அதனால் என்ன பலன் என்று மறைமுகமாக கேட்டு, என் அறிவை நிலைகுலையச் செய்து, காசு பறிக்கிறாள்.  நிச்சயமா தன் பிள்ளையை வைத்து எந்தத் தாயும் தண்ணீர்  கூடக் கொடுக்காமல் நா வறண்டு விக்கி வக்கித் தவிக்கும் குழந்தையை வேடிக்கை காட்டி பணம் சம்பாரிக்க மாட்டாள். குழந்தையை தூக்கிக் கொண்டு பிச்சைஎடுப்பவள் தன்னுடைய பிள்ளையை எங்கே விட்டிருப்பாள்.   குறைந்தபச்சம் நிழலிலாவது உட்க்கார வைத்திருப்பாள் அல்லவா.  தாய் பாசம் தன் வயிற்றில் பிறந்தவளுக்கு தான் காட்ட வேண்டுமா?

அந்த சுயநலக்காரி என்னிடம் இருந்து எதுவும் வாங்க முடியாது என்று புறிந்துக் கொண்டு எரிச்சலில் சில சாபங்களை எனக்குக் கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த காருக்கு மாறிச்சென்று பிச்சை எடுத்தாள். ஆனால் அவள் கையில் வைத்திருந்த குழந்தையின் பிஞ்சி முகம் மட்டும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அது எதோ முனகியது தெரிந்தது. ஒருவேளை நான் உதவி செய்யவில்லை என்று நினத்திருப்பாலோ. அவளுக்கு நான் எப்படி சொல்ல நாங்கள் காசு போடுவதினால் தான் உன்னை கூவிக் கூவி விற்கிறார்கள் என்று. செல்லமே என்னைப் புரிந்துக் கொள் நான் வேறு விதமாக உதவ முயற்சிக்கிறேன் இதை என் உறுதி மொழியாக வைத்துக்கொள்.

மறுநாள் காலை அதே சிக்னல் நான் முன்தினம் நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கும் போதே நாலு வயது இருக்கும் பெண்குழந்தை பல வாகனங்களின் இடையே புகுந்து வந்து என் காரின் முன்னே வந்து சரமாரியாக ரோட்டை தொட்டுக் கும்பிட்டுவிட்டு "அம்மா, உங்க கால்ல வேணா விழுறேன் தயவுசெஞ்சு பிச்ச போடும்மா, பள்ளிக்கூடம் திறக்கறதுக்குள்ள நான் சம்பாரிப்பதை வச்சுத்தான் புத்தகமே வாங்கணும். நான் படிச்சா தாம்மா என் சொந்த கால்ல நிக்க முடியும், இல்லேன்னா வாழ்க்க முழுக்க இப்படித்தான் பிச்ச எடுக்கணும்."

எனக்கு என்னவோ அந்தப் பொண்ணு சொன்னது சரியாய் பட்டது. கண்ணாடியை இறுக்கி எங்க படிக்கிறன்னு கேட்டேன், பக்கத்துல இருக்குற தாழ்த்த பட்ட ஜாதிகாரங்களுக்கு ஒரு பள்ளி இருக்கு அங்க தான் படிக்கிறேன்னு சொன்னாள். உங்க அம்மா எங்கன்னு கேட்டதுக்கு, அவுங்க செதுப்போயிடாங்க என்று சொன்னால். உன்னை இப்போ யாரு பாத்துக்குறாங்கன்னு சொல்லு, நான் அவுங்க கிட்ட பேசி உன்னை என் கூட கூட்டிக்கிட்டுப் போறேன். உன்ன நல்லா படிக்க வைக்கிறேன்னு சொனேன். அவள் ரொம்ப சந்தோஷ பட்டவள் போல நடித்து நீங்க ஒரு ஓரமாய் நில்லுங்க நான் கூட்டிகிட்டு வரேன்னு சொன்னவ தான். இருபது நிமிஷம் ஆகியும் வரல. என்னோட முட்டாள் தனத்த நெனச்சி நானே அசிங்கப்பட்டுக் கொண்டேன். இவ்வளவு தெளிவாக ஏமாற்றுவதற்கு யார் சொல்லி கொடுத்து இருப்பார்கள்.

இவர்கள் தேவைக்காக பிச்சை எடுப்பதாய் எனக்குத்  தோன்றவில்லை. யாரோ ஒருவர் பயன் பெறவே இதைச் செய்வதாக தோன்றுகிறது. ஒருவேளை தடுமாறி வந்தவர்கள் சுகம் கண்டு தொடர்கிறார்களோ. பூ விற்க, செருப்பு தைக்க, பால் போட,  வீட்டு வேலை செய்ய, டேபிள் துடைக்க பணம் தேவை இல்லையே. ஆயிரம் ரூபாய் முதலீட்டில் எவ்வளவு சிறுதொழில் இருக்கிறது. தயவு செய்து குழந்தை தொழிலாளிக்கு எதிராக போராடுபவர்கள் என்னை மண்ணியுங்கள். பிச்சை எடுப்பதைவிட, அதனால் மானத்தையும், உயிரையும் இழப்பதை விட, வேலை பார்ப்பதே மேல்.

நான் அவளுக்காகக்  காத்திருந்த சமயத்தில், எத்தனை வகையான பிச்சைக்காரகள் சந்தித்தேன் தெரியுமா:

*      அரைகுறை ஆடையுடன் இல்லாத அழகை இருப்பதாகக்  காட்டி பணம் பிடுங்கிய அரவாணிகள்.

*     ஏதோ ஒரு புகையை விசிறியபடியே காசுகேட்டு கெஞ்சிய வாட்ட சாட்டமான வாலிபன்.

*    கண் பார்வை தெரியாத ஒரு கும்பல் வண்டிகளின் நடுவே சரியாக சென்று கை ஏந்தினார்கள்.

*    ஒரு காகிதத்தை கையில் வைத்துக்கொண்டு ஏதோ சைகையில் சொல்லி அவர்கள் கொடுக்கும் பணத்தை பெரிய தோள்பட்டை பையில் போட்டுக்கொண்டார்கள் தங்களின் எதிர்காலத்தையே தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத சில்வண்டுகள்.

*    முதுமை தங்களை சோதிக்க அதனிடம் ஜெயித்துவிடுவதற்க்காக தினமும் தோற்கும் ஆதரவு இல்லா முதியவர்கள்.


இதற்க்கு ஒரு இயக்கமே இருக்குன்னு சொல்றாங்களே அது உண்மையா? இதை தடுக்க எதாவது சட்டம் இருக்கா?  பிச்சை எடுப்பவர்களை தண்டிக்க எதாவது சட்டம் இருக்கா? இவர்களுக்கு எப்படி உதவினால் இவர்களை காப்பாற்றவோ திருத்தவோ முடியும். நாம் இன்று யோசிக்கா விட்டால் வளர்ந்து வரும் ஏழை பணக்காரன் இடைவெளி வளர்ந்து கொண்டே போகும். நாம் என்ன தான் கஷ்டப்பட்டாலும் இந்தியா முன்னேறிய நாடுகளின் வட்டத்திற்குள் கால் பதிக்க முடியாது.


எனக்கு ஒரு வழிதோன்றுகிறது, நம்மில் சிலர் சேர்ந்து ஒரு இயக்கத்தை உருவாக்கவேண்டும். அந்த இயக்கத்தில் மூலமாக ஒவ்வொரு பிச்சைக்காரர்களையும் சோதித்து அவர்கள் இத்தொழிலுக்கு வர காரணம் என்ன, மருத்துவ உதவி தேவை படுகிறதா என்று சோதித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். கலந்துரையாடலின் மூலமாக அவர்களைத் திருத்த முயற்சிக்கலாம் இல்லையேல் எதாவது உதவும் இல்லங்களில் சேர்த்து விடலாம், சிறு தொழில் ஆரம்பிக்க கற்றுத் தருவோம்.  கடைசியாக அவர்களுக்கு நம்மால் எந்த விதத்திலும் உதவி செய்ய முடியாது, வேறு வழியே இல்லை என்றால் நாமே ஒரு உத்தரவாத அட்டையைக் கொடுப்போம், அதில் அவர்களின் நிலைமையையும், எந்த இடத்தில பிச்சை எடுக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு கொடுத்தால் அதை காண்பித்து பிச்சை எடுத்துக்கட்டுமே. ஆனால் எனக்கு தெரிந்த வரையில் நிறைய வழிகள் இருக்கிறது அவ்வாறு நடக்காமல் பாதுகாக்க.

இது ஏதோ பெரிய விஷம் என்று நாம் நினைக்க வேண்டாம். தமிழ் நாட்டில் நிச்சயம் மனம் படைத்த ஐந்து மனநல மருத்துவர்கள் இருப்பார்கள், ஆயிரம் ஆயிரம் வசதி படைத்த நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், நிறைய பணத்தை நன்கொடையாக பெறும் காப்பகங்கள் இருக்கின்றன, பல்வேறு இலவச மருத்துவமனைகள் இருக்கின்றன, உதவி செய்வதற்க்காகவே காத்துக் கொண்டிருக்கும் சில தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றே ஒன்று ஒரு இயக்கம் இவர்களை வழிநடத்த. உங்களுக்குள் பல கேள்விகள் எழலாம், எப்படி பிச்சை காரகளுக்கு இதை தெரிய படுத்துவது? இதற்க்கு பல வழிகள் இருக்கின்றது ஒவ்வொரு டிராபிக் போலீசிடமும் நோட்டீஸ் கொடுத்து சொல்லலாம், சுவரொட்டி ஒட்டலாம், ரேடியோவில் தெருவிக்கலாம். முக்கியமாக நாம் கொடுக்கும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு பிச்சைப்  போடாதீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

இந்த இயக்கத்தை செயல் படுத்த நிறைய நல்ல உள்ளங்களும், உறுதியான நெஞ்சமும், இரக்கக் குணமும், இணையும் கைகளும் தேவைப் படுகிறது. தயவு செய்து எனக்குத் துனை நில்லுங்கள் பிச்சைக்காரர்களுக்கு கைகொடுங்கள்.

No comments:

Post a Comment